தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-12-15 19:24 GMT
குண்டும், குழியுமான சாலை 
மதுரை அனுப்பானடி மெயின்ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. குண்டும், குழியுமான இந்த சாலையில் செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
மோகன், மதுரை. 
சுத்தம் செய்யப்படுமா? 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அரசூரணி தெற்கு பகுதியில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சுத்தம் செய்யப்படாமல் மோசமான நிலையில உள்ளது. இதனால் இங்கு வரும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
முருகன், அரசூரணி. 
வாகன ஓட்டிகள் அவதி 
மதுரை நகர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட செல்லூர், மீனாம்பாள்புரம் வார்டு எண் 6, 7, குலமங்கலம் பிரதான சாலை ஆங்காங்கே மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் இவ்வழியே செல்லும் போது பழுதாகி விடுகிறது. விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 
அபுபக்கர், மதுரை. 
பாலம் சீரமைக்கப்படுமா? 
விருதுநகர் மாவட்டம் கட்டனாா்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் இந்த பாலம் வழியாக செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இப்பாலத்தை சீரமைக்க வேண்டும். 
பால்பாண்டி, கட்டனார்பட்டி. 
தாழ்வாக செல்லும் மின்வயர் 
வெற்றிலைமுருகன்பட்டி கிராமத்தில் உள்ள சில மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன. இந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது மின்சார வயரில் உரசி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக தாழ்வாக செல்லும் மின்வயரை உயர்த்தி அமைக்க வேண்டும். 
அய்யப்பன், வெற்றிலைமுருகன்பட்டி. 
சாலை சீரமைப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தாமோதரன்பட்டினம் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சாலையில் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 
ராமநாதன், திருவாடானை. 
குவிந்து கிடக்கும் குப்பை 
மதுரை காதக்கிணறு பஞ்சாயத்து சண்முகவேல் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முருகானந்தம், மதுரை. 
சாக்கடை கால்வாயில் அடைப்பு 
விருதுநகர் மாவட்டம் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிநகர் காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகேஷ், சிவஞானபுரம். 
தெருநாய்கள் தொல்லை 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்ைல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். விபத்து அபாயமும் உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவார்களா? 
ராஜா, காரைக்குடி.

மேலும் செய்திகள்