ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்;
காட்பாடி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஷாலிமாரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். அப்போது பயணிகள் இருக்கைகளின் கீழே கேட்பாரற்று கிடந்த பார்சலை எடுத்து சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.