டவுன் பஸ்களை சிறைப்பிடித்து மாணவர்கள் சாலை மறியல்
செய்யாறு, வந்தவாசியில் அரசு டவுன் பஸ்களை சிறைப்பிடித்து மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
செய்யாறு
செய்யாறு, வந்தவாசியில் அரசு டவுன் பஸ்களை சிறைப்பிடித்து மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடுதலாக 10 கி.மீ. தூரம் இயக்கம்
செய்யாறில் இருந்து கோவிலூர் கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் தடம் எண்:56 இயக்கப்பட்டு வருகிறது. அந்த டவுன் பஸ் மூலம் செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று படித்து வருகின்றனர்.
அந்தப் பஸ் தற்ேபாது கோவிலூர் கிராமத்தில் இருந்து கூடுதலாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் செய்யாறுக்கு படிக்க வருகின்றனர்.
கோவிலூரில் இருந்து கூடுதலாக 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ் இயக்கப்படுவதால் வழக்கமாக செல்லும் நேரத்தை விட கோவிலூருக்கு வரும்போது அரைமணிநேரம் கால தாமதமாக வருகிறது.
சிறைப்பிடிப்பு
இதனால் தாங்கள் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. கால தாமதமாக செல்ல ேவண்டிய நிலை இருந்து வருகிறது.
ஏற்கனவே இருந்த கால அட்டவணைப்படி அரசு பஸ்ைச கல்லூரி நேரத்துக்கு இயக்க வேண்டும், எனக் கோரி கிராம பொதுமக்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ேநற்று காலை 9.30 மணி அளவில் கிராமத்துக்கு வந்த தடம் எண்:56 அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு பணிமனை கிளை மேலாளர் கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு அரசு டவுன் பஸ்சை விடுவித்தனர். இதனால் அங்கு சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே தேசூர்-செய்யாறு சாலையில் விளாநல்லூர் கிராமம் உள்ளது. இந்த வழித்தடத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செய்யாறு அரசு கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு அரசு டவுன் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர்.
இதுதவிர வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் காலை நேரத்தில் அரசு டவுன் பஸ்களில் ஏறி பயணம் செய்கிறார்கள்.
மேற்கண்ட வழித்தடத்தில் காலை வேளையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நேரத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாக, கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் பள்ளி, கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று காலை விளாநல்லூர் கிராமத்தில் தேசூர்-செய்யாறு சாலையில் பள்ளி, கல்லூரி நேரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, செய்யாறு பணிமனை மேலாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இந்த வழித்தடத்தில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் காலை 8.30 மணியில் இருந்து 11.30 மணிவரை 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து படிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை செங்கத்தில் இருந்து கல்லூரிக்கு சென்று வரும் வகையில் காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என சே.அகரம் கூட்ரோடு தானாமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.