தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-15 18:24 GMT

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்

  வேலூர்-ஆற்காடு சாலையில் சி.எம்.சி மருத்துவமனை அருகே எப்போதும் போக்கு வரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் நடு ரோட்டில் மாடுகளும் சுற்றி திரிகின்றன. மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  -மோகன்ராஜ், வேலூர்.

தார் சாலையில் பள்ளம்

  ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி மேட்டுத்தெங்கால்-பெல் செல்லும் சாலையை கடந்சில மாதங்களுக்கு முன்பு தான் சீரமைத்தார்கள். அந்தச் சாலையில் பல இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இரவில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். பள்ளமாக இருக்கிற இடங்களில் தார் கலந்த ஜல்லிக்கலவையை கொட்டி சீரமைக்க வேண்டும்.
  -எம்.மணவாளன், மேடுத்தெங்கால்.

 பழுதடைந்த மினிடேங்க்

  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நவம்பட்டு கிராமம். அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் மினி டேங்க் வைக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அதை, சரியான முறையில் பராமரிக்காததால் பழுதான நிலையில் உள்ளது. அதன் மீது செடி, கொடிகள் படர்ந்துள்ளது. சேதமான டேங்கை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
  -நாதன், நவம்பட்டு.

நியான் விளக்கை சரி செய்வார்களா?

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ‘தமிழ் வாழ்க’ என்ற ‘நியான்’ மின் விளக்கு அமைக்கப்பட்ட எழுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது. அது, பழுதடைந்துள்ளது. அதை, சரி செய்வார்களா?
  -திலக்ராஜ், சோளிங்கர்.

மின் விளக்குகள் எரியவில்லை

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சந்தவாசல் கிராமம் மேட்டுத்தெருவில் உள்ள தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். தெருவில் வெளிச்சம் இல்லாததால் குழந்தைகள் விளையாட சிரமப்படுகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.
  -முருகன், சந்தவாசல்.

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

  ஆற்காடு-அரணி சாலையில் ஆற்காடு கோனன்காலனி அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் கிறிஸ்தவ ஆலயம், கூட்டுறவு வங்கி, மகளிர் சுயஉதவி குழு வங்கி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலம், போலீஸ் நிலையம், பொதுச் சுகாதார நிலையம் ஆகியவைகள் உள்ளன. அந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -சிவக்குமார், ஆற்காடு.

 சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் அடங்கிய எம்.ஜி.ஆர். நகர் விரிவு பகுதியில் உள்ள தெருக்களில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் சேற்றிலேயே நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இப்பகுதியில் சிமெண்டு சாலை அல்லது பேவர் பிளாக் சாலை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -கார்த்திக், கண்ணமங்கலம்.

பஸ் கால அட்டவணை வைக்க வேண்டும்

  காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டப்பட்டு பயணிகள் அமர 36 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பஸ்கள் வந்து செல்லும் நேரம், ஊர்கள் விவரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஏற்கனவே கால அட்டவணை வைத்தார்கள். அந்த, கால அட்டவணையை அகற்றி விட்டார்கள். அதேபோல் வள்ளிமலை கூட்ரோடு வழியாக வந்து செல்லும் பஸ்கள், நேரம், ஊர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கால அட்டவணை பலவை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -பி.துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்