கல்லாக்கோட்டை மதுபான ஆலை வாகன டிரைவர் கொலை? போலீசார் விசாரணை
மதுபான ஆலை வாகன டிரைவர் கொலை?
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை ஊராட்சியில் கால்ஸ் மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலையில், பணியாளர்களை ஏற்றிவரும் வாகனத்தின் டிரைவராக மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரண்ராஜ் (வயது 30) என்பவர் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணியாளர்களை ஏற்றி வந்து வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது ஆலையின் காவலாளி வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்து பார்த்த போது, சரண்ராஜ் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவர் ஆலையின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் அங்கு வந்து சரண்ராஜ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த சரண்ராஜின் தந்தை ராஜேந்திரன் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுக்க விடாமல் தடுத்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மற்றும் கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சரண்ராஜ் இறப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். பின்னர் போலீசார் சரண்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.