தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2021-12-15 17:37 GMT
பெரம்பலூர்
பாலம் கட்டி தர வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், அய்யர்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகள் அனைத்தும்  வயல் வெளி பகுதியில் அய்யர்பாளையம்-செம்மண் குட்டை செல்லும் பாதையில்  உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பாலம் வசதி இல்லாததால்  மழைக்காலங்களில் அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் முட்டதளவு தண்ணீரில் இறங்கி அந்த பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நாகராஜ்,  அய்யர்பாளையம்,  பெரம்பலூர்


குடிநீர் வசதி செய்து தரப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, சாத்தியடி ஊராட்சி, மேலக்காவனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது   இதனால் இப்பகுதி பொதுமக்கள் குளம் , குட்டைகளில் உள்ள நீரை பிடித்து குடித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளத. இதனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரவேல் , மேலகாவனூர், புதுக்கோட்டை


தேங்கி நிற்கும் மழைநீர்
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை நான்குரோடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில்  மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒன்றும் உள்ளது. இதனால் தினமும் அச்சத்துடனே செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவசுப்ரமணியன், தென்னிலை, கரூர்

அரசு பஸ்  இயக்க வேண்டும்
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம்  புதுவாடியில் இருந்து கரூருக்கு தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றார்போல் பஸ் வசதி இல்லை. இதனால் புதுவாடியில் இருந்து வேலாயுதம்பாளையம் சேங்கல் வழியாக கரூருக்கு செல்ல அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 சங்கர், புதுவாடி, கரூர்.


அரசு பள்ளி சுவற்றில் சுவரொட்டிகள்
திருச்சி மாவட்டம், முசிறியில்  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் தனியார் மற்றும் கட்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்றி சுவற்றில் கல்வி சார்ந்த வரைபடங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற ஓவியங்கள், திருக்குறள் , பழமொழிகள் ஆகியவற்றை எழுத வேண்டும். மேலும் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசாருதீன், முசிறி, திருச்சி

பஸ் நிலையத்தில் மாடுகளால் விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. இதனால் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதோடு காயமடைகின்றனர். அந்த வழியாக செல்லும் பஸ்சுகளுக்கும், பயணிகளுக்கு இடையூறாக நடு ரோட்டில் நின்று வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பொதுமக்கள், பொன்னமராவதி, புதுக்கோட்டை

உடைந்து கிடக்கும் அடிப்பம்பு 
அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் கல்லுபட்டறை சாலையில் அடிப்பம்பு உள்ளது. இந்த அடிப்பம்பு குழாய் தண்ணீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். செவ்வாய் சந்தை அன்று பூ செடி வியாபாரிகள் இந்த அடிப்பம்பு மூலமே தண்ணீர் எடுத்து விற்பனைக்கு கொண்டு வரும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வாடாமல் வைத்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்கலாக இந்த அடி பம்பின் மேல் பகுதி தூரு பிடித்து உடைந்து விட்டது. இதனால் அந்த அடிப்பம்பை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். ஆழ்குழாயில் தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியா நிலையில் உள்ளது. இதனால் அடிபம்பில் தூரு பிடித்து உடைந்த பகுதியை மாற்றி உடனே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள்,  அறந்தாங்கி, புதுக்கோட்டை


மேலும் செய்திகள்