ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் புதிய ரெயில் பாதை
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ெரயில் பாதை அமைக்க முட்புதர்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ெரயில் பாதை அமைக்க முட்புதர்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
புயலால் அழிந்து போன ரெயில்பாதை
ராமேசுவரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில்புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி உள்ளது. அதுபோல் 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி பகுதியானது கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் பயங்கர கடல் சீற்றத்தால் முழுமையாக அழிந்து போனது.
இதில் தனுஷ்கோடி-ராமேசுவரம் இடையிலான ரெயில் பாதை தண்டவாளங்கள் முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்தன. அதன் பின்னர் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ரெயில்பாதை
அதுபோல் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைப்பதற்காக கடற்கரையை ஒட்டிய இடங்களில் மண் ஆய்வு பணியும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே நடந்தது.
இந்த நிலையில் ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைய உள்ள இடங்களில் சர்வே செய்யும் பணி நடைபெற உள்ளது. தனுஷ்கோடி கம்பிபாடு முதல் முகுந்தராயர் சத்திரம், கோதண்ட ராமர் கோவில் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் ரெயில் பாதை அமைய உள்ள இடங்களில் வளர்ந்து நிற்கும் காட்டு கருவேல மரங்கள் உள்ளிட்ட செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணியானது தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.மேலும் அந்த இடத்தில் சர்வேயர்கள் மூலம் அளந்தும் அடையாளம் கண்டு பதிவு செய்து வருகின்றனர்.
இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
3 ெரயில்நிலையங்கள்
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ராமேசுவரம் ரெயில்வே நிலையம் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த ரெயில்பாதை தனுஷ்கோடி செல்லும் சாலையில் இருந்து 18 மீட்டர் தூரத்தில் வடக்கு பகுதியில் புதிய ரெயில் பாதை அமைய உள்ளது. ராமேசுவரத்திலிருந்து ஜடா தீர்த்தம், கோதண்டராமர் கோவில், முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி கம்பி பாடு வரையிலும் இந்த புதிய ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெயில் வழிப்பாதையில் 3 ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜடா தீர்த்தம், முகுந்தராயர் சத்திரம், இறுதியாக தனுஷ்கோடி ஆகிய 3 இடங்களில் ரெயில்வே நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாக இருப்பதால் அதற்கேற்றபடி சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே தண்டவாள பாதைகள் தாங்கி நிற்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
56 ஆண்டுக்கு பிறகு...
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரூ.120 கோடி நிதியில் ரெயில்பாதை அமைக்கப்பட உள்ளதாக ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்ததுடன் 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ்கோடி வரையில் ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
--