காதல் கணவரின் திடீர் தற்கொலையால் இளம்பெண்ணும் உயிரை மாய்த்த பரிதாபம்

காதல் கணவரின் திடீர் தற்கொலையால் இளம்பெண்ணும் உயிரை மாய்த்ததால் அவருடைய 5 மாத குழந்தை பரிதவிக்கிறது.

Update: 2021-12-15 17:25 GMT
மதுரை, 
காதல் கணவரின் திடீர் தற்கொலையால் இளம்பெண்ணும் உயிரை மாய்த்ததால் அவருடைய 5 மாத குழந்தை பரிதவிக்கிறது.
காதலித்து திருமணம்
மதுரை மாவட்டம் பெருங்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவருடைய மகள் முத்துமாரி (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் அவரது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரித்த போது தங்கைக்கு திருமணம் முடிக்காமல் பிரசாந்த் திருமணம் செய்து கொண்டது குறித்து உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதையடுத்து தன்னால் குடும்பத்தினருக்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்து மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
உயிரை மாய்த்தார்
கணவன் இறந்த சம்பவம் மதுரையில் உள்ள முத்துமாரிக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவரை பெற்றோர் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  இந்த நிலையில் முத்துமாரி கணவரின் சட்டையை அணிந்து, அவரது புகைப்படத்தை சட்டை பையில் வைத்து கொண்டு முத்துமாரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை அறிந்ததும் அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்து அவனியாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து முத்துமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பரிதவிப்பு
மேலும் முத்துமாரி இறப்பதற்கு முன்பு அவரது கையில், “மாமா பிரசாந்த் ஐ லவ் யூ” என்று எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் அதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. பெற்றோர் தற்கொலையால் அவர்களது 5 மாத குழந்தை பரிதவிக்கிறது.

மேலும் செய்திகள்