முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை கைது செய்ய தடை

முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை கைது செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-12-15 17:14 GMT
மதுரை, 
திண்டுக்கல்லில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வக்கீல் தேவேந்திரன் என்பவருக்கும், மாதர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை சிலர் தாக்க முயன்றதாக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் தேவேந்திரன் புகார் அளித்தார்.
அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது உள்பட மொத்தம் 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார்.  முடிவில், கோர்ட்டின் முன்பாகவோ, கோர்ட்டு வளாகத்திலோ இதுபோல போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பாலபாரதி உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை 6 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்