கடலோர காவல்படைக்கு கூடுதல் படகுகளை வழங்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
மீனவர்களின் நலன்கருதி கடலோர காவல்படைக்கு கூடுதல் படகுகளை வழங்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.
பனைக்குளம்.
மீனவர்களின் நலன்கருதி கடலோர காவல்படைக்கு கூடுதல் படகுகளை வழங்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.
நிரந்தர தீர்வு
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி கூறியதாவது:-
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பெரும்பான்மையாக கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஒருவித அச்ச உணர்வோடு வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இயற்கை சீற்றம், நடுக்கடலில் விபத்து போன்ற பல்வேறு மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நான் பலமுறை இலங்கை கடற்படையினருடைய அத்துமீறல்களை பற்றி வலியுறுத்தி இருக்கின்றேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்ற பொழுது அரசு ஒரு மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.
கூடுதல் படகுகள்
அது மட்டுமில்லாமல் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது இயற்கை சீற்றமோ, விபத்தோ ஏற்படுகின்ற போது நடுக்கடலிலேயே படகு கவிழக் கூடிய நிலையில் அவர்களை மீட்கக் கூடிய பணி என்பது ஒரு சிரமமான சவாலான பணியாக இருக்கின்றது. அதற்கு கடலோர காவல்படையினர் தான் அந்த மீட்பு பணிகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுக்கு கூடுதலான படகுகளை ஒதுக்கவேண்டும். குறைவான எண்ணிக்கையிலேயே ரோந்து படகுகள் இருக்கின்றது. குறைவான எண்ணிக்கையில் கடலோர காவல் படையினரும் இருக்கின்றார்கள். மீட்பு உபகரணங்களும் குறைவாக இருக்கின்றது. அதிக அளவில் அவர்களுக்கு மீட்பு உபகரணங்களையும், கடலோர காவல்படைக்கு எரிபொருள் உள்ளிட்ட உபகரணங்களையும் போதுமான அளவு ஒதுக்க வேண்டும்.
ஹெலிகாப்டர் வழங்க வேண்டும்
சமீபத்தில் கூட ராமேசுவரம், தங்கச்சிமடம், தொண்டி, கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளின் மீனவர்கள் விபத்துகளில் உயிர் பலியாகி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும்போது அரசு கூடுதலான அக்கறை செலுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இயற்கை சீற்றம் ஏற்படுகின்ற நேரத்திலேயே கடலோர காவல் படையினரால் படகுகளால் கூட மீட்க முடியாத நிலை உள்ளது. அந்த நேரத்தில் ஹெலிகாப்டர் உதவி தேவைப்படுகின்றது. மேலும் அச்சமயத்தில் ஹெலிகாப்டர் விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.