தம்பதியை கொடூரமாக கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தம்பதியை கொடூரமாக கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2021-12-15 17:01 GMT
காங்கேயம், 
காங்கேயம் அருகே வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொடூரமாக கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள  ரெங்காம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). இவருடைய மனைவி வள்ளியம்மாள் (68). இவர்களுக்கு சந்திரசேகரன் (48) என்ற மகனும், மேகலா (45) என்ற மகளும் உள்ளனர்.
சந்திரசேகரன் திருப்பூர் நல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருவதுடன், அங்கேயே பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மேகலாவுக்கு திருமணமாகி நத்தக்காடையூரில் வசித்து வருகிறார். விவசாயியான பழனிச்சாமிக்கு ரெங்காம்பாளையத்தில் 20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் அன்றாட செலவுக்காக 2 பசு மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார்.
கொடூர கொலை
இந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் இவர்களது வீட்டுக்கு பால் எடுத்துச்செல்லும் பால்காரர் வந்துள்ளார். வழக்கமாக இவர் வரும் நேரத்திற்கு பால் கறந்து வாசலுக்கு அருகே பால் நிரம்பிய கேன் தயாராக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் நேற்று காலை பால் கேன் எதுவும் இல்லை. இதனால் பால் எடுத்துச்செல்பவர் பழனிச்சாமியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். 
அப்போது வீட்டின் வராண்டாவில் பழனிச்சாமியும், அவரது மனைவி வள்ளியம்மாளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் வராண்டா முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.  
இது குறித்து காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிச்சாமியின் நடுமண்டையில் பலமாக வெட்டுக்காயம் இருந்தது. கழுத்தின் பின்பகுதியிலும் வெட்டப்பட்டு இருந்தது. வள்ளியம்மாளின்  தலையில் வெட்டுக்காயம், காது மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. மேலும் கழுத்து துண்டால் இறுக்கப்பட்டிருந்தது.
நகை கொள்ளை
 மேலும் வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது. அவர் காதுகளில் அணிந்து இருந்த கம்மல் அப்படியே உள்ளது. வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன.
இதையடுத்து திருப்பூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூனன் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் அவர்கள் உடல் கிடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை  சேகரித்துச்சென்றனர். இதையடுத்து தம்பதியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 
போலீசார் விசாரணை
இந்த கொலை குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வயதான தம்பதி வீட்டில் தனியாக  இருப்பதை தெரிந்துகொண்ட கொலையாளிகள் தம்பதியை கொடூரமாக கொன்று நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் துணிகளை கலைத்து போட்டுவிட்டு கொலையாளிகள் சென்றுள்ளனர்.
ஆனால் கொலையாளிகள் வள்ளியம்மாளின் தாலி சங்கிலியை மட்டும் கொள்ளையடித்துவிட்டு, கம்மலை விட்டு சென்ற காரணம் என்ன, கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலை  சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்