வாலிபரை வெடிகுண்டு வீசி கொலை செய்வதாக மிரட்டல்
வாலிபரை தாக்கி வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர், டிச.
வாலிபரை தாக்கி வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர்
புதுச்சேரி கோர்க்காடு பேட் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன். தமிழ்நாடு மின்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 21), ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
கடந்த 13-ந் தேதி கரிக்கலாம்பாக்கம் மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஜயனின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. விழா முடிந்து நள்ளிரவு லோகேஸ்வரன், அவரது நண்பர் வசந்த ராஜாவை உறுவையாற்றில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வெடிகுண்டு மிரட்டல்
கோர்க்காடு நெசலூர் அம்மன் கோவில் பின்புறம் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், பிரகாஷ்ராஜ், முருகதாஸ் ஆகியோர் குடிபோதையில் இருந்தனர். அவர்கள் லோகேஸ்வரனை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மணிகண்டன் தரப்பினர் உருட்டுக் கட்டையால் தாக்கி, எங்களிடம் வம்பு வைத்துக்கொண்டால் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லோகேஸ் வரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின்பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், பிரகாஷ்ராஜ், முருகதாஸ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.