சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்
சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
முத்தூர், -
முத்தூர் அருகே வாய்க்கால்மேட்டுப்புதூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
சாலையோர ஆக்கிரமிப்புகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூா் - வெள்ளகோவில் பிரதான சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் பஸ் நிறுத்தம் தென்புறம் ஒரு தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் எதிா்புறம் சாலையோர பகுதிகளில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி இருந்தனர். இதனால் இப்பகுதி பிரதான சாலையில் கனரக வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்றும், மேலும் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவிகளுக்கு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், எனவே இந்த சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்உத்தரவின்படி வெள்ளகோவில் கோட்டநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நேரில் வந்து சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு வீடுகள் அளவு, கட்டிட விவரங்கள் குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அளித்தனர்.
மேலும் இப்பகுதி சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இடித்து அகற்றம்
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இப்பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதன்படி தாராபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, வெள்ளகோவில் உதவி கோட்ட பொறியாளர் பார்த்தீபன், உதவி பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சாலை பணியாளர்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை முற்றிலும் இடித்து அகற்றினார்கள்.