டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-12-15 16:32 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பு பணிகள்

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சிவக்குமார், செந்தில், ஆறுமுகம், மணிகண்டன், ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீசு ஒட்டப்படுகிறது. மேலும் தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டில் 33 பேருக்கும், கடந்த வாரத்தில் 2 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நகரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கூறியதாவது:-

தொட்டிகளை சுத்தப்படுத்துதல்

பொள்ளாச்சி பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. பொதுமக்கள் தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைப்பதால் டெங்கு காய்ச்ல் மற்றும் ஜிகா வைரஸ் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ளது. 

இந்த கொசுக்கள் பகலில் மனிதர்களை மட்டும் கடிக்கும். இந்த வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டும் முட்டையிட்டு, அவை ஒரு வார காலத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் பரப்பும் கொசுக்களாக மாறி விடுகின்றன. எனவே வாரம் ஒரு முறை தொட்டிகள் மற்றும் நீர் தேங்கி நிற்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வீட்டின் உள்புறம் தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

டெங்கு அறிகுறிகள்

டெங்கு தடுப்பு பணிக்கு நகராட்சி மூலம் 86 தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் ஏ.டி.எஸ். கொசுப்புழு ஒழிப்பு பணி் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பணியாளர்கள் சுழற்சி முறையில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சென்று பணிபுரிந்து வருகின்றனர். 

பொதுமக்கள் டெங்கு தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி, தோலின் மேற்பகுதியில் வியர்குரு போன்ற தடிப்புகள், உடல்வலி மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படும். ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை விரைவாக குறைத்து உள் உறுப்புகளில் ரத்த கசிவு ஏற்படும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி, வடுகபாளையம் மற்றும் காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்