ஒர்க் ஷாப் தொழிலாளி பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒர்க் ஷாப் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒர்க் ஷாப் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஆனந்தன் (வயது 20). இதேபோன்று காமராஜர் வீதியை சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர்கள் 2 பேரும், பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோட்டூர் ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்தன், அஜித்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார். அஜித்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.