இம்மானுவேல் ஆலயம் சார்பில் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் வாழ்த்துப்பாடல் பவனி
இம்மானுவேல் ஆலயம் சார்பில் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் வாழ்த்துப்பாடல் பவனி
உடுமலை,
உடுமலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சி.எஸ். ஐ.இம்மானுவேல் ஆலயம் சார்பில் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் வாழ்த்துப்பாடல் பவனி நடந்து வருகிறது.
கிறிஸ்மஸ் வாழ்த்துப்பாடல் பவனி
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகிறது. அதேபோன்று உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
உடுமலை தளிசாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பாடல் பவனி நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆலய சபை ஆயர் மற்றும் வாழ்த்துப்பாடல் பவனி குழுவினர் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் இந்த ஆலயத்தை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்களைப்பாடி ஜெபம் செய்து வருகின்றனர். இந்த வாழ்த்துப்பாடல் பவனி நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
கலை நிகழ்ச்சிகள்
கிறிஸ்துமஸ்விழாவையொட்டி ஆலயத்தில் சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் பெரியவர்களுக்கு திருமறை அறிவுப்போட்டி நடந்தது. வருகிற 19-ந்தேதி ஆராதனை முடிந்தபிறகு, 70 வயது நிரம்பிய முதியவர்களை கவுரவித்தல், கிறிஸ்துமஸ் மரவிழா, ஆண்கள், பெண்கள் ஐக்கிய சங்கம் மற்றும் ஜெபக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
25-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருவிருந்து ஆராதனை, 8.30 மணிக்கு 2-ம் ஆராதனை நிகழ்ச்சிகளும், 26-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் இளைஞர் இயக்கத்தினரின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி ஜெபக்கூட்டம் நடக்கிறது.
புத்தாண்டு விழா
31-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு திருவிருந்து ஆராதனையும், ஜனவரி 1-ந்தேதி காலை 8.30மணிக்கு 2-வது ஆராதனையும் மாலை 6.30 மணிக்கு ஞாயிறு பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலய சேகர குருவானவர் எஸ்.ஆனந்தன், குருத்துவப்பணியாளர் சி.அன்புராஜ், சேகர செயலாளர் டி.பால்ஜெயச்சந்திரன், பொருளாளர் ஏ.ஜெயக்குமார் மற்றும் ஆலய மக்கள் செய்துள்ளனர்.