கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது

Update: 2021-12-15 15:25 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் 30 மாநில அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாஸ முருகவேல், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் அ.ஷன்மதி, போட்டி குழு செயலாளர் சேகர் ஜெ.மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. போட்டியில் 30 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. வீரர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப் பட்டுள்ளது. இந்த போட்டியில் தமிழக அணியில் கோவில்பட்டியை சேர்ந்த 9 வீரர்கள் விளையாடுகின்றனர். மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் தங்கி பயிலும் 3 வீரர்களும் தமிழக அணியில் விளையாட உள்ளனர்.  இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.  மேலும் இப்பகுதியில் உள்ள கிராமங் களிலும் மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்