தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-15 15:23 GMT


தடுப்புச்சுவரில் மரக்கன்று 

கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் மரக் கடையில் இருந்து சுரங்கப் பாதையை நோக்கி செல்லும் சாலையின் தொடக்கத்தில் மேம்பால சுவரில் மரக்கன்று முளைத்து வளர்ந்து நிற்கிறது. இதனால் மேம்பாலத்தின் சுவர் பெயர்ந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரக்கன்றை அகற்ற வேண்டும்.
கர்ணன், மரக்கடை.

ஒளிராத மின்விளக்கு

  கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு மேம்பாலத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து தொடங்கும் மேம்பாலத்தின் வலதுபுறத்தில் உள்ள ஒரு மின்விளக்கு மின்மினிப்பூச்சி போன்று மின்னி மின்னி எரிகிறது. இது அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பறிப்பது போன்று உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த விளக்கை சீரமைத்து சரியாக ஒளிரசெய்ய வேண்டும்.
  கிஷோர், காந்திபுரம்.
  
சாலை வசதி வேண்டும்

  கோவைப்புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் புதிய சாலைகள் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பலரும் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே புதிய சாலை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  நந்தகோபால், கோவைப்புதூர்.

தேங்கி நிற்கும் தண்ணீர்

  கோவை குனியமுத்தூர் நகர்ப்புற சுகாதார நிலைய வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் இங்கு வரும் பொதுமக்களும் கடும் அவதி அடைகின்றனர். எனவே நகர்ப்புற சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மைதீன், குனியமுத்தூர்.

கால்நடை மருத்துவமனை

  கோவைப்புதூரில் குளத்துப்பாளையம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் கால்நடைகள் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு கால்நடை மருத்துவமனை இல்லை. இதனால் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் நீண்ட தூரத்தில் உள்ள பேரூருக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே குளத்துப்பாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சுரேஷ், கோவைப்புதூர்.


சாலை அமைக்கும் பணி

  மாதம்பட்டி அருகே செல்லப்பகவுண்டன்புதூர் விஜய் நகரில் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை தார் ஊற்றி சாலை போடப்பவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
நேதாஜி, செல்லப்பகவுண்டன்புதூர்.


குண்டும், குழியுமான சாலை

  நல்லட்டிபாளையத்தில் இருந்து கிணத்துக்கடவுக்கு செல்லும் தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
மணிவேல், நல்லட்டிபாளையம்.


சுகாதார சீர்கேடு

  பொள்ளாச்சி நகராட்சி நல்லப்பா நகரில் முதல் கீழமேல் சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. அங்கு குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனலட்சுமி ராஜா, மகாலிங்கபுரம்.


கடும் துர்நாற்றம்

  கோவை சுங்கம் பைபாஸ் சாலையோரத்தில் ஆர்.ஜி. நகர்-கே.பி.நகர் இடையே தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பத், கே.பி.நகர்.


சாலையை சீரமைக்கலாமே...

  கோவை அத்திப்பாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கரண், அத்திப்பாளையம்.


தினத்தந்தி செய்தி எதிரொலி
தெருவிளக்கு வசதி கிடைத்தது

  கோவை இடிகரை பேரூராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தெருவிளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி.
முருகேசன், கிருஷ்ணாபுரம்.

மேலும் செய்திகள்