ரேஷன் கடை முன்பு தரமற்ற அரிசியை கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கம்பம் அருகே ரேஷன் கடை முன்பு தரமற்ற அரிசியை ெகாட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-12-15 20:51 IST
கம்பம்: 


தரமற்ற அரிசி வினியோகம் 
கம்பம் அருகே கம்பம்மெட்டு சாலையில் உள்ள காலனியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நேற்று அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அந்த அரிசி தரமற்றதாகவும், பழுப்பு நிறத்திலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கம்பம்மெட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கு வரவழைப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். 

ஆர்ப்பாட்டம் 
இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ரேஷன் கடை முன்பு வினியோகம் செய்த அரிசியை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்ட வழங்கல் ஆய்வாளர் பாலமுருகன் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உப்புக்கோட்டை 
இதேபோல் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த கடைகளில் இந்த மாதம் வினியோகிக்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்தில் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் அரிசியை வாங்க பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக உப்புக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி தேக்கம் அடைந்துள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடையில் தரமான அரிசி வினியோகம் செய்யும்படி கேட்டால், ஊழியர்கள் முறையான பதில் தெரிவிப்பதில்லை. எனவே தரமான அரிசி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்றனர்.  

மேலும் செய்திகள்