கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வீரபாண்டி அருகே கூடுதல் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-15 15:11 GMT
தேனி : 

வீரபாண்டி அருகே தப்புக்குண்டு பிரிவு என்னுமிடத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 630 மாணவர்களும், 350 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் தப்புக்குண்டு சாலையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தப்புக்குண்டு பிரிவில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு கூடி நின்றனர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் கவுசல்யா, தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது மாணவர்கள் தங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் வீரபாண்டி வரை சுமார் 6 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம் என்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அல்லிநகரம் காந்தி நகரை சேர்ந்த இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் (வயது 25) உள்பட 5 பேர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்