பால் பண்ணையில் கொத்தடிமைகளை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை இருளர்கள் முற்றுகை கடலூரில் பரபரப்பு

பால் பண்ணையில் கொத்தடிமைகளை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இருளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-15 15:10 GMT
கடலூர், 

பால் பண்ணை

மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரத்தை சேர்ந்த இருளர்கள் 13 பேர், வேப்பூர் அருகே குடிகாடு ராயபுரத்தில் உள்ள பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தனர். 
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேர், பால் பண்ணையில் இருந்து தப்பி வந்தனர். பின்னர் அவர்கள் மீதமுள்ள 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 13-ந் தேதி பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த எம்.அகரம் பகுதியை சேர்ந்த இருளர்கள், நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த புதுநகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், உங்கள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதற்கு அவர்கள், நாங்கள் ஏற்கனவே மனு அளித்தும், கலெக்டர் கண்டுகொள்ளவில்லை என்று கூறினர். உடனே போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதையடுத்து இருளர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்