கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிமன்யு (வயது 29). இவர் கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இவருடன் தாயார் மஞ்சுலதா மற்றும் சகோதரர் அபிஜித் ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் அபிமன்யு நேற்று அதிகாலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர்தொட்டிக்கு ஏறும் ஏணியில் திடீரென தூக்கு போட்டுள்ளார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள கல்பாக்கம் அணுவாற்றல் துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அபிமன்யு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). இவர் கடந்த சில நாட்களாக சரியான முறையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது பெற்றோர் கண்டித்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் சுரேசுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பற்றிய தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.