4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.11.58 லட்சம் செலவில் திருத்தணி முருகன் கோவிலில் தங்க தேர் சீரமைப்பு

திருத்தணி முருகன் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.11.58 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட தங்கத்தேரை, அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கிவைத்தார்.

Update: 2021-12-15 10:35 GMT
திருத்தணி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.11.58 லட்சம் செலவில் சீர்செய்யப்பட்ட தங்கத்தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதேபோல 8 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.18.30 லட்சம் செலவில் புதிய வெள்ளித்தேர் தயார் செய்யும் பணியையும் அவர் தொடங்கிவைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன், கோவில் இணை கமிஷனர் பரஞ்சோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தங்கரதம் 1972-ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்த தங்கத்தேர் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தேரின் மர பாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தங்க ரதத்தில் உள்ள பழுதுகளை நீக்க ஏதுவாக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி தங்கரதத்தில் தங்கரேக் பதிக்கப்பட்ட தகடுகளை குடைகலசம் முதல் சுவாமி பீடம் வரை உள்ள செப்புத்தகடுகள் பிரிக்கப்பட்டது.

அதன்பிறகு எந்தவித பணிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்த கோவிலில் கடந்த ஜூலை 2-ந்தேதி ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்துள்ள தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து, திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.

அதன்படி ரூ.4.75 லட்சம் செலவில் மரத்தால் ஆன தேர் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு, தங்கரேக் பதித்த செப்பு உலோகத் தகடுகள் பொருத்துவதற்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேருக்கான மின் அலங்காரம் செய்யும் பணி ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேர் மண்டபத்துக்கான ரோலிங் சட்டர் சீரமைக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கத்தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் வெள்ளித்தேர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது. இத்தேரில் உள்ள மரபாகங்கள் பழுதடைந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அவை பிரிக்கப்பட்டது. அதன்பின் 8 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனையின்பேரில் புதிய தேர் ரூ.18.30 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்