தர்மபுரி அரூரில் 520 பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு 19 வாகனங்களில் குறைகள் கண்டுபிடிப்பு

தர்மபுரி அரூரில் நேற்று ஒரே நாளில் 520 பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 19 வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.;

Update: 2021-12-15 05:29 GMT
தர்மபுரி:
தர்மபுரி அரூரில் நேற்று ஒரே நாளில் 520 பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 19 வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி தர்மபுரி சுற்றுலா மாளிகை பின்புறம் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி, பாலக்கோடு வட்டார அலுவலக எல்லைக்குட்பட்ட 210 பள்ளி வாகனங்கள் ஒரே நாளில் ஆய்வு செய்யப்பட்டது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் முன்னிலையில் குழு உறுப்பினர்கள் வாகனங்களின் தகுதித்தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைத்தளம் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 9 பள்ளி வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.  அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை ஒரு வாரத்துக்குள் நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
குறைகள் கண்டுபிடிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள் பொது சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆய்வின்போது தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன், துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரூர் 
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி கலெக்டர் முத்தையன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை சிவக்குமார், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் ரவி ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில் 310 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சிறு குறைபாடுகள் உடைய 10 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அந்த வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்