தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் 371 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 371 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-15 04:55 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 371 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி  கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை தாங்கினார். சங்கத்தின் வட்ட தலைவர் இளங்கோவன், ஒன்றியசெயலாளர் சுசிலா, ஒன்றிய பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர். மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
அரூர்-பாலக்கோடு
அரூரில் நடைபெற்ற மறியலுக்கு மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் வேடியப்பன், காந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் செட்டியப்பன், ஒன்றிய தலைவர் அண்ணாமலை, செயலாளர் காரல் மார்க்ஸ், துணை செயலாளர் திம்மன், பொருளாளர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட இணை செயலாளர் இடும்பன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்
பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில  பொருளாளர் சக்கரவர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் விக்ரம், மாரியப்பன், சாமுண்டீஸ்வரி, சண்முகம் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 371 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தர்மபுரியில் 25 பேரும், நல்லம்பள்ளியில் 58 பேரும், அரூரில் 98 பேரும், பென்னாகரத்தில் 92 பேரும், பாலக்கோட்டில் 98 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்