அரசு பணிக்கு தேர்வு எழுத வந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்
என்ஜின் கோளாறால் 5 மணி நேரம் ரெயில் தாமதமாக சென்றதால், அரசு பணிக்கு தேர்வு எழுத சென்றவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ராய்ச்சூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.
ராய்ச்சூர்: என்ஜின் கோளாறால் 5 மணி நேரம் ரெயில் தாமதமாக சென்றதால், அரசு பணிக்கு தேர்வு எழுத சென்றவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ராய்ச்சூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.
உதவி என்ஜினீயர் பணிக்கு தேர்வு
கர்நாடக அரசு தேர்வாணையம் சார்பில் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள உதவி என்ஜினீயர் பணியிடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வு கலபுரகியில் நடந்தது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக ஹாசனில் இருந்து சோலாப்பூர் செல்லும் ரெயிலில் மைசூரு, ஹாசன், பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் வழக்கமாக கலபுரகி ரெயில் நிலையத்திற்கு காலை 6 மணிக்கு சென்று விடும். இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த ரெயில் 3 மணிக்கு ராய்ச்சூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட முயன்ற போது என்ஜினில் கோளாறு உண்டானது. இதனால் ரெயில் ராய்ச்சூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதிகாலை என்பதால் தேர்வர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறை சரிசெய்ய முடியவில்லை. காலை 8 மணி ஆனதும் தேர்வர்களுக்கு ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்
இதையடுத்து காலை 10.30 மணிக்கு தங்களுக்கு தேர்வு இருப்பதாகவும், நாங்கள் எப்படி தேர்வு எழுத செல்வது என்றும் கூறி ரெயில்வே அதிகாரிகளிடம் தேர்வர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள், போலீசார் தேர்வகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு எங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் கேட்டு கொண்டனர். இதுகுறித்து கர்நாடக அரசு தேர்வாணையததிடம் ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
அப்போது தேர்வர்களுக்கு மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு அந்த ரெயில் காலை 8.30 மணிக்கு ராய்ச்சூரில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு கலபுரகியை சென்றடைந்தது. அதாவது அந்த ரெயில் 5½ மணி நேரம் தாமதமாக கலபுரகிக்கு சென்றது. இதற்கிடையே தேர்வர்கள் தேர்வு எழுத செல்ல வசதியாக 100 ஆட்டோக்கள், பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வாகனங்களில் ஏறி தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதினர்.