சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-12-14 21:03 GMT
ஈரோடு
சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
அந்தியூர் பி.கே.புதூர் கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கூளையன் என்கிற ராஜமாணிக்கம் (வயது 23). கூலி தொழிலாளி. இவர் பவானி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் நட்பாக பழகி உள்ளார். பின்னர் இந்த பழக்கத்தின் மூலம் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு மே மாதம் 17-ந்தேதி சிறுமியை ராஜமணிக்கம் கடத்தி சென்றார்.
பின்னர் திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
20 ஆண்டு ஜெயில்
மேலும் இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ராஜமாணிக்கத்துக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

மேலும் செய்திகள்