நெல்லை உள்பட 4 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
நெல்லை உள்பட 4 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 262 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசுவாமி, சங்கரசுப்பு, சுமாவுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் அங்குள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 13 பெண்கள் உள்பட மொத்தம் 52 பேரை கைது செ்யதனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்று மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அம்பை தாலுகா அலுவலகத்தையும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை தாலுகா வட்ட துணைத்தலைவர் அகஸ்தியராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சேரன்மாதேவியில் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மானூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்ணின் மரியாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.