இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கவர்னர் பாராட்டு
மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி விஞ்ஞானிகளை பாராட்டினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமியுடன் சென்றார். அந்த மைய இயக்குனர் அழகுவேல், கவர்னரை வரவேற்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
அப்போது கவர்னர், அங்குள்ள விஞ்ஞானிகளை வாழ்த்தினார். விண்வெளியில் விஞ்ஞானிகள் தங்களது பங்களிப்பு மூலம் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள் என்று பாராட்டினார். விக்ரம் சாராபாய் போன்றவர்களின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றி மனித குலத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. இஸ்ரோவின் அர்ப்பணிப்பு, பணி, கலாசாரம் ஆகியவை தனியார் துறை உள்பட மற்ற அனைவரும் பொறாமைப்படும் வகையில் உள்ளது. விண்வெளி துறையில் இந்தியாவை முதன்மையான நாடாக மாற்ற வேண்டும், என்று விஞ்ஞானிகளை கவர்னர் வலியுறுத்தினார்.
மேலும், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசினார். இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, விஞ்ஞானிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.