மாணவர்களின் பஸ் படிக்கட்டு பயணத்தால் விபத்து அபாயம்
சிவகாசியில் மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சிவகாசி,
சிவகாசியில் மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசித்து வரும் மாணவ, மாணவிகள் தங்கள் உயர் கல்வியை சிவகாசி, சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதியில் உள்ள கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் கற்று வருகிறார்கள். இதனால் இவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து சிவகாசிக்கு வந்து விட்டு, பின்னர் இங்கிருந்து பல்வேறு பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர் சாலைகளில் அதிகளவில் கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற கட்டாய நிலையில் விதிகளை மீறி தொடர்ந்து படிக்கட்டில் பயணங்களை மேற்கொள்கிறார்கள். இதனால் பல முறை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
தடுக்கப்படுமா?
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர். சாத்தூர் வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களிலும் காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மாணவர்கள் கிடைக்கும் பஸ்களில் ஏறி படிக்கட்டில் தொங்கியபடி செல்கிறார்கள்.
எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக ஒரு முறை 3 வழித்தடங்களிலும் பஸ் இயக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் எடுக்க வேண்டும். மேலும் சிவகாசியில் இருந்து புறப்படும் மதுரை பஸ்களில் கல்லூரி மாணவர்களை ஏற்ற உரிய அனுமதியை கண்டர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் டவுன் பஸ்களில் செய்யப்படும் ஆபத்தான பயணங்கள் ஓரளவு தடுக்க வாய்ப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.