மதனகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மதனகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
சொர்க்கவாசல் திறப்பு
பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலத்துடன், மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூப தரிசனத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கொடிமரம் வழியாக நாழிகேட்டான் வாசலுக்கு வந்தார். இதையடுத்து ஐதீகப்படி சொர்க்கவாசல் 6 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக உற்சவ பெருமாள் வந்தார். அதனைத்தொடர்ந்து கோவிந்தா... கோபாலா... என்ற கோஷத்துடன் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.
உற்சவ பெருமாள்
பின்னர் வேதவிண்ணப்பம் வாசித்த பிறகு கட்டியம் கூற ஸ்தானீகருக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்ரஹாரம் வழியாக சன்னதி தெருவிற்கு உற்சவ பெருமாள் வந்து, கோவில் எதிரே உள்ள கம்பத்து ஆஞ்சநேயரை 3 முறை வலம்வந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி கம்பம் ஆஞ்சநேருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் வண்ண விளக்குகளைக் கொண்டு, பூ அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பக்தர்கள் தரிசனம்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள் மற்றும் மூலவர் பெருமாள், மரகதவல்லி தாயாரை தரிசனம் செய்தனர். சுவாமி - தாயாரை தரிசித்தபிறகு, சொர்க்கவாசல் வழியே வெளியே வந்தனர். நேற்று இரவு வெள்ளி கருட வாகனத்தில் உற்சவபெருமாள் அலங்கரித்து வைக்கப்பட்டு, மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது.