‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா புக்கரம்பை ஊராட்சி தில்லங்காடு மேற்கு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக போடப்பட்டிருக்கும் குடிநீர் குழாய் சேதமடைந்து ஆங்காங்கே நீர் அதிகமாக சாலையில் வெளியேறுகிறது. மேலும் வீடுகளுக்கு இணைக்கப்பட்டிருக்கும் குடிநீர் இணைப்பு குழாய்களும் பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தில்லாங்காடு.
நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்திக்கோட்டை, கொள்ளுக்காடு கிராமத்தில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்தி சென்று கடித்து விடுகின்றன. மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர், சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-ஷேக்தாவூது, கொள்ளுக்காடு.