பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்

காரைக்குடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-12-14 18:55 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

பட்டா கேட்டு போராட்டம்

காரைக்குடி சந்தைபேட்டை, கணேசபுரம், கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 50 ஆண்டிற்கும் மேல் அந்த பகுதியில் இவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு பட்டா வழங்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று முன்தினம் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். அங்கு கோட்டாட்சியர் இல்லாதைத யொட்டி மனு வாங்காததால் அவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அங்குள்ள அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் கலைந்து போக செய்தனர்.
 இந்நிலையில் நேற்று காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவில் முன்பு சந்தைபேட்டை, கருணாநிதிநகர், கணேசபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டனர். தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோவில் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்களது நீண்ட நாள் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து சர்வே பணியும் செய்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் நல்ல தகவல் வழங்கி அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்