தஞ்சையில் மினிவேனில் கடத்தப்பட்ட 2,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் டிரைவரிடம் போலீசார் விசாரணை
தஞ்சையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மினிவேனில் கடத்தப்பட்ட 2,500 ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தஞ்சாவூர்:-
தஞ்சையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மினிவேனில் கடத்தப்பட்ட 2,500 ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேனில் ரேசன் அரிசி
தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் துறைக்கும், குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், குடிமைப்பொருள் வழங்கல் பறக்கும்படை தனி வருவாய் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற மினிவேனை மறித்து சோதனை செய்தனர். மேலும் வாகனத்தில் பின்புறம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், ரேசன் அரிசியுடன் மினிவேனையும், டிரைவரையும் உணவு பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2500 கிலோ பறிமுதல்
அவர்கள் நடத்திய விசாரணையில், மினிவேனை ஓட்டி வந்தவர் வலம்புரியை சேர்ந்த டிரைவர் தினேஷ் என்பதும், 50 மூட்டைகளில் 2, 500 கிலோ அரிசி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை சேகரித்து அவற்றை மூட்டை கட்டி கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு எங்காவது இருந்து மொத்தமாக எடுத்து வரப்படுகிறதா? என்பது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி எங்கே கொண்டு செல்லப்படுகிறது? இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.