பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி

பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது.

Update: 2021-12-14 18:32 GMT
ராமேசுவரம்,

பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது.

ரெயில் பாலம் பணி

பாம்பனில் தற்போதுள்ள ரெயில் பாலம் 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையாகி விட்டது. அதனால் இந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் சுமார் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த ரூ.1½ ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
இந்த புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் இதுவரையிலும் பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் இடைப்பட்ட கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பகுதியில் இதுவரையிலும் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.

இரும்பு கர்டர்கள்

இந்த நிலையில் பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் தூண்கள் மீது பொருத்துவதற்காக இரும்பு கர்டர்கள் ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி ரெயில்வே நிலையம் எதிரே உள்ள ஒரு இடத்தில் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் கர்டர்கள் தயார் செய்யும் பணிகள் முழுமையாக முடிவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கர்டர்கள் ஒவ்வொன்றாக பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் தூண்கள் மீது விரைவில் பொருத்துவதற்கான பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரும்பு கர்டர்களை புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் பொருத்த வசதியாக தூண்கள் மீது கிரேன் என்று சொல்லக்கூடிய நகரும் கேன்ட்ரிகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மேலும் செய்திகள்