நாமக்கல் அருகே 2,500 லிட்டர் கலப்பட டீசல் லாரியுடன் பறிமுதல்-வாலிபர் கைது

நாமக்கல் அருகே 2,500 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார், வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-14 17:23 GMT
நாமக்கல்:
வாகன சோதனை
குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டுகள் வெற்றிவேல், பெரியசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அதில் கலப்பட டீசல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரியில் வந்த கண்ணனிடம் (வயது 28) விசாரணை செய்தபோது, அது எந்தவித உரிமமோ அல்லது ஆவணமோ இன்றி சட்ட விரோதமாக அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
2,500 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்
இதையடுத்து லாரியுடன் 2,500 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய லாரி மற்றும் கலப்பட டீசல் உரிமையாளர் செழியன் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை வலைவீசி தேடி வருவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர். 
கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு அருகே 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்