குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை-உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தமிழகத்தில் குறைந்த பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதற்கு நகர தலைவர் பராசக்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்திவேல், எம்.ஆர்.முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.