சத்துவாச்சாரியில் புதிய பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
வேலூர் சத்துவாச்சாரியில் உடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் உடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலம் அமைக்க கோரிக்கை
சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளி பகுதியையும், காந்திநகர் பகுதியையும் இணைக்கும் வகையில் கால்வாய் மீது சிறுபாலம் ஒன்று இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் லாரி சென்றபோது திடீரென பாலம் உடைந்தது. தற்போது அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் உடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய பாலம் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் புதிய பாலம் அமைக்கக்கோரி காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்றுகாலை பாலம் அமைந்திருந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல்
அப்போது பொதுமக்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும், பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மறியல் செய்வோம் என்று தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பொதுமக்கள் சர்வீஸ் சாலைக்கு சென்று அங்கு மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாலத்தை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி என்ஜினீயர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.