கொடைக்கானல் அருகே காட்டு யானையை விரட்டிய வனக்காவலரை பாம்பு கடித்தது

கொடைக்கானல் அருகே காட்டு யானையை விரட்டிய வனக்காவலரை பாம்பு கடித்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-12-14 17:16 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மலைக்கிராம விவசாயிகளையும் காட்டு யானைகள் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்த‌ன‌ர். இதையடுத்து வனத்துறையினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் கடந்த சில தினங்களாக தீவிர‌மாக‌ ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைக‌ளை விரட்டும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது வனக்காவலர் அழகுமணிவேலை (வயது 25) விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று கடித்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். உடனே அருகில் இருந்த மற்ற வனத்துறை ஊழியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கான‌ல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்