அரசு பெண்கள் பள்ளியை பெற்றோர் முற்றுகை

பொள்ளாச்சியில் அரசு பெண்கள் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-12-14 17:16 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 657 மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக 442 மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாணவி வீட்டில்  தனிமைப்படுத்தி கொண்டார்.

இதையடுத்து பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதற்கிடையில் காய்ச்சல் பாதிப்பு உள்ள மாணவிகளை வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சல் இல்லாத மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை. 

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, கொரோனா தொற்று குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக கூறி மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு 2 வகுப்பறைகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் பள்ளிக்கு மட்டும் விடுமுறை விடாததால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது என்றனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது திடீரென்று பள்ள தலைமை ஆசிரியை கோமதி மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனே அவரை சக ஆசிரியர்கள் மீட்டு ஆட்டோவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்வி மாவட்ட அலுவலர் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். அதன்பிறகு பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்