தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
பொள்ளாச்சி அருகே திம்மங்குத்துவில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே திம்மங்குத்துவில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் மற்றும் காற்று மாசுபடுவதாக நாகராஜ் என்பவர் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மனு அனுப்பினார். இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தென்னை நார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வை தொடர்ந்து தென்னை நார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் மற்றும் காற்று மாசுபடுவதாக பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவு நகலை மின்வாரியத்துக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து திம்மங்குத்துவில் செயல்பட்டு வரும் 3 தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தொழிற்சாலைகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. எனவே திம்மங்குத்துவில் உள்ள 3 தொழிற்சாலைகளுக்கும் நீர்நிலைகள், காற்று மாசுபடாதவாறு நடவடிக்கைகள் எடுக்க கூறி நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலைகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறி வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி- பாலக்காடு ரோடு ராமபட்டிணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வருகிறோம்.
திடீரென்று மின்சாரத்தை துண்டித்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்றனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பாலக்காடு ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
---