கால்நடை டாக்டருக்காக காத்திருக்கும் ஆஸ்பத்திரி...

கால்நடை டாக்டருக்காக காத்திருக்கும் ஆஸ்பத்திரி

Update: 2021-12-14 17:03 GMT
கால்நடை டாக்டருக்காக காத்திருக்கும் ஆஸ்பத்திரி...
வால்பாறை

வால்பாறை எம்.ஜி.ஆர். நகர்.பகுதியில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி கடந்த 65 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த கால்நடை ஆஸ்பத்திரிக்கு என்று சோலையாறு அணை, கருமலை, வாட்டர்பால்ஸ் என்று மூன்று இடங்களில் துணை கால்நடை சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வந்தன.
இது குறித்து வால்பாறை பகுதி மக்கள் கூறியதாவது:-

வால்பாறையில் இருக்கும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஆரம்ப காலத்தில் நிரந்தர கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.இங்கு நிரந்தரமாக பணியாற்றி வந்த டாக்டர்களுக்கு குடியிருப்பு வசதிகள், ஆஸ்பத்திரிக்கென தனி ஆஸ்பத்திரி வளாகம் செயல்பட்டு வந்தது. கடந்த காலங்களில் பல ஆண்டுகளாக நிரந்தர டாக்டர் நியமிக்கப்படவில்லை.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். அவர் பணி மாறுதல் பெற்று சென்ற பின்னர் கால்நடை மருத்துவம் படித்த கால்நடை டாக்டர் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ துறை நியமித்தது.இந்த ஒப்பந்த டாக்டரின் ஒப்பந்தம் 4 மாதத்திற்கு முன் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து வேறு டாக்டர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

தற்போது அரசு கால்நடை ஆஸ்பத்திரியின் கால்நடை உயிர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் மட்டும் பணியில் இருந்து வருகிறார். இவர் ஆஸ்பத்திரிக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்களுக்கும் எஸ்டேட் பகுதிக்கும் நேரில் சென்றும் கால்நடைகளுக்கும் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கும் சிகிச்சையளித்து வருகிறார். 
தற்போது நிரந்தரமாக கால்நடை டாக்டர் நியமிக்கப்படாததால் அரசின் திட்டங்களும் மக்களுக்கு தெரிவிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வால்பாறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை ஆய்வாளர் ஒருவர் மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் எஸ்டேட் பகுதியில் உள்ள துணை கால்நடை சிகிச்சை மையங்களும் மூடப்பட்டு விட்டது. இதனால் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க முடியாமல் போய் விடுகிறது.
மேலும் வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி சூழ்ந்த இடமாக இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகளும் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி விடுகிறது. அந்த சமயத்தில் வனவிலங்குகளுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வெளியூர்களில் இருந்து வனத்துறையின் கால்நடை டாக்டர்கள் வந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசு கால்நடை மற்றும் பராமரிப்பு துறையின் சார்பில் வால்பாறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு நிரந்தர கால்நடை டாக்டரை நியமிக்க வேண்டும். அல்லது தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி இரண்டு மாதத்திற்கு முன்னால் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நிறுத்தப்பட்டவர்களில் ஒருவரை வால்பாறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு நிரந்தர டாக்டராக நியமிக்க வேண்டும் அல்லது இவர்களின் ஒப்பந்த காலத்தை மீண்டும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.


 எனவே வால்பாறை பகுதியில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தை உரிய பராமரிப்பு செய்ய வேண்டும். நிரந்தர கால்நடை டாக்டரை நியமித்து அவருக்கான குடியிருப்பை பராமரிப்பு செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு போடக்கூடிய அனைத்து வகையான ஊசி மருந்து களையும் பாதுகாப்பாக வைத்து பராமரிப்பதற்கு குளிர்சாதன பெட்டி வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் அரசு கால்நடை ஆஸ்பத்தியாக மாற்றுவதற்கு கால்நடை பராமரிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எது எப்படியோ தற்போது வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரி மருத்துவர்களுக்காக காத்திருக்கும் ஆஸ்பத்திரியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்