பழனி பஞ்சாமிர்தத்திற்கு தபால் உறை வெளியீடு

புவிசார் குறியீடு பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

Update: 2021-12-14 16:59 GMT
பழனி:
பழனி முருகன் கோவில் என்றாலே பஞ்சாமிர்தம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பழனி பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 
அதேபோல் கொடைக்கானல் மலைப்பூண்டு, விருப்பாட்சி மலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்டவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதற்கிடையே தபால் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு, விருப்பாட்சி மலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் பழனி பஞ்சாமிர்தத்திற்கான சிறப்பு தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். தபால் துறையின் திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ், உதவி கண்காணிப்பாளர் ராஜா, கோவில் மேலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பின்னர் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ் ஆகியோர் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கான சிறப்பு தபால் உறையை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பழனி தலைமை தபால் அலுவலர் திருமலைசாமி உள்பட தபால் துறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்