மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
அய்யலூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.;
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கேசவன் (7), தர்ஷன் (2) ஆகிய மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று கேசவன், தனது தம்பி தர்ஷனுடன் வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மாடியில் இருந்து தர்ஷன் தவறி கீழே விழுந்தான்.
இதில் படுகாயமடைந்த தர்ஷனை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தர்ஷன் சேர்க்கப்பட்டான்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.