தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று 3 போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஒரு நபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தினார்

Update: 2021-12-14 16:21 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று 3 போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஒரு நபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தினார்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
33-வது கட்ட விசாரணை
33-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 3 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன், நெல்லையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரையும், 2-வது கட்டமாக 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்