சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சீர்காழி:
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். சீர்காழி நகர தலைவர் நடராஜன், வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் கழக செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
மறியல் போராட்டத்தின் போது ஊனமுற்றோருக்கு உதவி தொைகயை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை வறுமைக்கோடு பட்டியலில் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழங்கப்படும் சலுகைகளை தமிழகத்திலும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
48 பேர் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் ஞானப்பிரகாசம், இளங்கோவன், புருஷோத்தமன் உள்ளிட்ட 48 பேர்களை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.