நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு

நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு

Update: 2021-12-14 16:01 GMT
ஊட்டி

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிய நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2½ நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் 4 நாட்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

தொடர்ந்து விபத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

ராணுவம் தத்தெடுப்பு 

அவருடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஹெலி காப்டர் விபத்தில் தடயங்கள் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. ஹெலி காப்டர் வால், முன்பகுதி, இறக்கை போன்ற பாகங்கள் அங்கிருந்து கயிறு மூலம் எடுத்து ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பாகங்கள் இருந்த பகுதியில் தடயங்கள் உள்ளதா என்று விமானப்படையினர் ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்க ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணிகளுக்கு உதவிய நஞ்சப்ப சத்திர கிராம மக்களின் சேவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இதைதொடர்ந்து ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து உள்ளது. மேலும் தமிழக அரசு மூலம் அத்தியாவசிய வசதிகளையும் செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 

ரூ.2½ கோடி ஒதுக்கீடு 

இந்த நிலையில் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.2½ கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர் ஊராட்சி ஒன்றியம் நிதிகளின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 இதில் பொதுமக்களுக்கு தேவையான நடைபாதை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை, தடுப்புச்சுவர், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப் பட உள்ளன. தொடர் மழையால் பழுதடைந்த வீடுகளின் மேற்கூரைகள் சீரமைக்கப்படுகிறது. குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து, செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்