கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
மேல் கூடலூரில் இருந்து நடு கூடலூர் வழியாக சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதை முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
ஜெபராஜ், கூடலூர்.
ஆபத்தான மின்கம்பம்
பொள்ளாச்சி-கோவை மெயின்ரோட்டில் தி.ரு.வி.க மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், இங்குள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.
கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி.
பஸ்கள் நிற்க வேண்டும்
பொள்ளாச்சி-பல்லடம் மெயின் ரோட்டில் காட்டம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ்கள், பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் செல்லும் சில அரசு பஸ்கள் இங்கு நின்று செல்வது இல்லை. இதனால் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
சுகன்யா, பொள்ளாச்சி.
செயல்படாத இ-சேவை மையம்
பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம் தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆதார் கார்டு திருத்தம் உள்ளிட்ட இணையதள சேவைகள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் இ-சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசுப்பிரமணியன், பந்தலூர்.
தெருநாய்கள் தொல்லை
கோவை சின்னவேடம்பட்டி கருப்புசாமி லே அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. கூட்டம் கூட்டமாக உலா வரும் தெருநாய்கள், இரவு நேரத்தில் ஊளையிடுவதுடன், அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
நவீன், சின்னவேடம்பட்டி.
வேகத்தடை வேண்டும்
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இடையர்பாளையம் செல்லும் சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடந்து வருகிறது. எனேவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
கார்த்திக், கோவை.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கோவை இடையர்வீதி, தெலுங்குவீதி சந்திப்பு பகுதியில் பாதாள சாக் கடை குழி இருக்கும் இடத்தில் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அதை சுற்றிலும் இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நடைபாதையில் இதுபோன்று வைத்து உள்ளதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும்.
சந்திரன், கோவை.
ஒளிராத மின்விளக்கு
கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக மின்விளக்கு ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
சாம், கணபதி.
சாலையில் அபாய குழி
கோவை மணியக்காரம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள அம்மா உணவகம் அருகே சாலையில் குடிநீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு சாலையில் உள்ள இந்த அபாய குழியை சரிசெய்ய வேண்டும்.
கந்தசாமி, கோவை.
கழிவுநீரால் துர்நாற்றம்
கோவை சரவணம்பட்டி 28-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கி வெளியேறி வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
பார்த்திபன், சரவணம்பட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு குமரன் கார்டன் பகுதிக்கு நுழையும் சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அத்துடன் அங்கு ஆடு, கோழி இறைச்சி கழிவுகளையும் கொட்டுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அவற்றை சாப்பிட தெருநாய்கள் அங்கு அதிகளவில் குவிகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
முருகவேல், கோவை.