புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

Update: 2021-12-14 15:25 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா எச்சரித்துள்ளார்.
கஞ்சா விற்பனை
திருப்பூர் மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து மற்றும் சிறப்பு சோதனைகள் நடந்தன.
இதில் கடந்த 11-ந் தேதி அம்மாபாளையத்தில் 309 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். நேற்று வாவிபாளையம் பகுதியில் 5 கிலோ 600 கிராம் கஞ்சா கடத்தி வந்த தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (20) சமத்துவபுரத்தை சேர்ந்த சவுகத்அலி (24) ஆகியோரை கைது செய்தனர்.
தனிப்படையினருக்கு பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், ஏட்டுகள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, காவலர்கள் மணிகண்டபிரபு, நாகேந்திரன், மாரி, யுவராஜா, திருப்பதி, பார்த்திபன் ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
இளைஞர்கள் நலன் கருதியும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்