திருப்பூரில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி
திருப்பூரில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கழிவுநீர்
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டு லட்சுமி தியேட்டர் ரோட்டில் சாக்கடை கால்வாய் உள்ளது. சாமுண்டிபுரம், திருமலைநகர், மூகாம்பிகை காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாய் மூலமாக நல்லாற்றில் சென்று கலக்கிறது. ஆனால் கால்வாய் விரிவாக இல்லாததால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி மழைநீர் சாலையில் பாய்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அங்குள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சாக்கடை கால்வாயில் அதிக அளவில் கழிவுநீர் வந்ததால் கால்வாய் நிரம்பியது. இதையடுத்து கழிவுநீர் அனைத்தும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதேபோல் வாகன ஓட்டிகள் குளம் போல் தேங்கி இருந்த கழிவுநீரில் மிதந்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
நடவடிக்கை
எனவே அந்த பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் காட்டி, கழிவுநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.